Welcome

Friday, December 4, 2020

இந்த பதிவை படித்துவிட்டு இருமுடி கட்டும் நாள் வரையாவது இதை.....

இந்த பதிவை படித்துவிட்டு இருமுடி கட்டும் நாள் வரையாவது இதை உங்கள் உடலில் செய்து அனுபவித்து பாருங்கள். உங்கள் உடலிலேயே  ஜோதி தரிசனம் காண்பீர்கள்.
பிராணனுக்கு வடிவம் நிறம் கிடையாது. பிராணன் தான் உயிர் ஆற்றல். பிராணன் என்பது காற்று அல்ல, காற்று அந்த பிராணனை தாங்கி செல்லும் ஒரு ஊடகம் மட்டுமே. பிராணன் நிறைந்த காற்று பிராண வாயு எனப்பட்டது.
காற்றிலும் உணவிலும் கொஞ்சம் அதிக பிராணன் உண்டு. வேகவைக்காத தாவர விதை உணவுகளில் கொஞ்சம் அதிகம் உண்டு. அதிகாலை பிரம்ம முஹூர்த்த பொழுதில் வீசும் காற்றில் பிராணன் அதிகம். நீரிலும், சூரிய ஒளியிலும், சந்திர ஒளியிலும், தீயிலும், மலை உச்சியிலும், மழை நீரில், நெய்யில் பிராணன் உண்டு. ஒருவரின் ஆயுள், நோயெதிர்ப்பு திறன், ஆன்மீக முன்னேற்றம் எல்லாவற்றிற்கும் பிராண உயிர் ஆற்றலே காரணம். நீங்கள் காம சிந்தனை கொண்டால் உடனடியாக இந்த பிராணன் வெள்ளையான விந்து திரவமாக மாறி இன்னொரு உயிரை உருவாக்க தயாராகி விடும். அப்படி மாறி விட்டால் பின் அது வெளியே போய்விட முற்படும். அதனால் தான் விரத காலங்களில் காமத்தை ஒதுக்கி வைத்தனர்.
அப்படி சேமிக்கப்பட்ட பிராணன் கோபத்திலும், வாய் கத்தல், உடல் பதைபதைக்கும் வேகமான ஓட்டம், கடுநடை, கடும் உழைப்பு, கள்குடித்தல், புகை வாங்குதல், மாமிச உணவை செரிப்பதில், பொரோட்டா போன்ற  மாவுப்பண்டங்களை செரிப்பதில்  (நீண்ட நேரம் செரிமானம் நடைபெறும் எவ்வித உணவும் கூடாது), அதிக புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவும் கூடாது, அதிக நேரம் பொழுதுபோக்கு சாதனங்களிலும் (டிவி பார்த்தல், பாடல் கேட்டல்) ஆகியவற்றிலும் செலவாகிடும். முடிந்த வரை இவற்றை தவிருங்கள். வாழைப்பழம், வெந்நீர், அல்லது இரவில் உறங்கும் முன் கடுக்காய் பொடி கொண்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள். மலத்திலிருந்து கிளம்பும் அசுத்த ஆவி இல்லாத தூய உடலில் உண்டாகும் பிராணன் அதிகம். இதை கொஞ்சம் நீங்களே உணர முயலுங்கள்.
இன்று நீங்கள் உண்ணும் உணவு ஏழாம் நாள் பிராண உயிர் ஆற்றலாக மாறும். இப்படி 6 அல்லது 7 வாரம் சேமித்த பிராணனை உங்கள் உடலிலேயே நிலைநிறுத்த வேண்டும். அதற்குதான் இவ்வளவு விதிகளும். இவ்வாறு உண்டாகிய பிராணனை தன் உடலிலேயே பிரதிஷ்டை செய்பவன் யோகி. அவனே உடலே ஆலயம். அங்கு பிராண பிரதிஷ்டை நிகழந்தாலே இறைவன் எழுந்தருள்வான். பசுவின் பால் ஆனது, தயிராக, மோராக, வெண்ணையாக, இறுதியில் நெய்யாக மாறும், அது போலவே நாம் உண்ணும் உணவும், அன்னரசம், ரத்தம், தசை, கொழுப்பு, மச்சை, இறுதியில்  பிராண உயிர் ஆற்றலாக மாறும். இதையே நெய்யுடன் ஒப்பிட்டு அதை கட்டி எடுத்து செல்லுவர். உடலில் பிராணனை தேக்கி எடுத்து செல்வர். எல்லாம் உருவகம் தான்.
சமதள தரையில் ஓடும்போது மூச்சு இரைக்கும். மலை ஏறும்போது மூச்சு ஆழமாக மேலும் கீழும் உள்வாங்கும். கவனியுங்கள் இரண்டுக்கும். வித்தியாசம் புரியும். இந்த ஆழமான சுவாசத்தினால் நம் உடல் முழுதும் வியாபித்துள்ள பிராண ஆற்றல் உஷ்ணமடைந்து உச்சி சிரசில் அடையும். இதையே நெய்யை அய்யன் உச்சியில் பொழிவதற்கு உவமானம். இவ்வாறு ஆழமான சுவாசத்தை செய்து கொண்டே ஐயனை போல குத்துக்காலிட்டுஅமர்ந்து கொண்டு அல்லது சம்மணம் போட்டு பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு இரு கைகளையும் வணக்கம் செய்வது போல ஒன்றாக்கி  தலைக்கு மேல் உயர்த்தி பிடித்துக்கொண்டு மூச்சில் கவனம் வைக்க வேண்டும். ஒரு அரைமணி நேரத்தில் இடகலை சுவாசம் (உகரம்), பிங்கலை சுவாசம் (அகரம்) இரண்டும் இனைந்து சுழுமுனை சுவாசம் (மகரம்) ஓடும். மகரம் என்பது நெடு நெற்றி நாடி ஸ்தானம். சிற்றம்பலம் எனபது நம் உடலை குறிக்கும். பொன்னம்பலம் என்பது நம் தலையை குறிக்கும். பொன்னம்பல மேடு  என்பது நம் தலை முகடு. இதை சித்தர் நெறியில் இருப்போர் அறிவர். நம் பிராண ஆற்றல் நாம் விடும் ஆழமான சுவாசத்தால் உச்சி (தலை முகடை)  ஏறும். அப்போது இரு கைகளையும் உயர்த்தி ஒன்றாக்கி சுழுமுனையில் சுவாசித்தால் ஜோதி அனுபவம் உண்டாகும். அதுவே மகர ஜோதி. இதை நீங்கள் உங்கள் உடலில் உங்கள் உச்சந்தலையில் அனுபவிக்க வேண்டும். இதுவே ஜோதி தரிசனம். நீயும், நீ தேடும் அந்த இறையும் ஒன்றே என்று அனுபவமாக புரியும்.. நீயே அது. என்று உணர்த்தவே அங்கே “தத்வ மசி” என்று எழுதி வைத்திருப்பார்கள்.  இந்த அநுபவத்தை அடையாமல் நாம் எத்தனை ஆண்டுகள் சபரிக்கு சென்று வந்தாலும் என்ன பலன்?.
மலை ஏறும்போது வாய்விட்டு சத்தமாக சரண கோஷம் சொல்லாதீர். ஓடாதீர். வேண்டுமானால் ஆழ்மனதுக்குள் சொல்லுங்கள். வாய் கத்தலில் பிராணனை அழித்து விடாமல் மூச்சில் கவனம் வைத்து பொறுமையாக மலை ஏறுங்கள். அதற்குதான் ஒரு மண்டலம் விரதம் இருந்தோம். சிலருக்கு 2, 3 மலைகளை கடந்த உடனேயே இந்த அனுபவம் லேசாக வர ஆரம்பிக்கும். அங்கேயே வழிலேயே ஒரு ஓரமாக இருமுடியை இறக்கி வைத்து விட்டு முன் சொன்னது போல இரு காலை மடக்கி ஆசனத்தில் நிமிர்ந்து அமர்ந்து சுவாசம் செய்து அந்த அனுபவத்தை நன்கு அனுபவியுங்கள். இருமுடியை இறக்கி வைப்பதால் ஒன்றும் தீங்கு இல்லை. அய்யன் விரும்புவதே நீ இந்த அனுபவத்தை பெற வேண்டும் என்பதே. வெறும் சடங்குகளில் கவனத்தை செலுத்தி விட்டு, முக்கிய நோக்கத்தை தவற விடாதீர்கள். சளி தொந்தரவுகள் இருப்போர் பால், டீ, காபி தவிருங்கள். பால் சளியை அதிகபடுத்தி தொண்டையில் கட்டினால் பிராணன் தடைபடும். உச்சி ஏறாது. பொடி செய்த மிளகையும், நாட்டு சர்க்கரையும் கொண்டு செல்லுங்கள். வழியில் சுடுநீர் கிடைத்தால் கலந்து குடியுங்கள். இது தற்காலிகமாக கபத்தை அறுக்கும். பிராணனை தூண்டும்.
தூய்மை, விரதம் காத்து பிராணனை உண்டாக்கலும் ஆழமான சுவாசத்தால் அதை தலை உச்சிக்கு எடுத்து சென்று அபிஷேகம் பொழிய செய்தலும், விளைவாக ம-கர ஜோதியை காண்டலுமே ஐயப்ப வழிப்பாடின் தாத்பரியம். முக்கிய நோக்கம். வெறும் சடங்குகளில் கவனத்தை செலுத்தி விட்டு, முக்கிய நோக்கத்தை தவற விடாதீர்கள். நாம் சபரிக்கு செல்வது நம்முடைய சோதி அனுபவத்துக்காக தான்.  மற்றவரிடம் சொல்லி பெருமையடித்து கொள்ள அல்ல. அல்லது ஏதோ கடமையை கழித்தோம் என்றும் அல்ல, அல்லவே அல்ல. இதை உங்களுடன் மாலை அணிந்தோர் அனைவருக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் அறிவு பெற செய்வீராக.
தயவு செய்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கூட்டி சென்று அவர்களை வதைக்காதீர். உங்கள் பெருமைக்காக  விந்து சுரக்கும் முன்னர் எந்த குழந்தையையும் அலகு, குத்துதல், பூக்குழி இறக்குதல், அக்கினி சட்டி எடுத்தல், மாலை போடுதல் என்று எவ்வித ஆன்மீக செயல்பாட்டுக்குள்ளும் புகுத்தாதீர். பால் முதிர்ச்சி அடையும் வரை எல்லாக் குழந்தையும் ஏற்கனவே இந்திரரின் கண்காணிப்பில் உள்ளார்கள். ஆன்மிகம் பக்தி என்று கூறிக்கொண்டு தேவையில்லாமல் அவர் சாபக் கருமத்தை வாங்கி கொள்ளாதீர். இப்பயணத்தில் நீங்கள் கடக்கும் ஆறுகள், கடல்கள், மலைகள், காடுகள் எதிலும் பிளாஸ்டிக், கண்ணாடி, ஆணி போன்றவற்றை போடாதீர்கள். இயற்கையே ஆதி மூலம் அதன் தூய்மையை காத்திடுங்கள். ஐயன் அருளட்டும்.

No comments:

Post a Comment