Welcome

Wednesday, October 14, 2020

புதுவிதமான பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா தலங்கள்..

Tamil Tradition and Culture is Healthy and Scientific Formalities to us

தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் இல்லாத சிறப்பு அம்சம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. ஆமாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒன்றுதான்
சிறப்பிடம் பெற்று இருக்கும்.

ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும்தான்

வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையாக இருக்கட்டும்,
கட்டிடகலையின் உச்ச சாதனைக் கோயிலாக இருக்கட்டும்

இயற்கை அழகுசொட்டும் அருவியாக இருக்கட்டும்,
பசுமை போர்வை விவசாய தோழன் அணைகட்டாக இருக்கட்டும்,

புவியியல் சிறப்பு பெற்ற புதை படிமங்களாகட்டும்,
சித்தர்கள் வாசம் செய்யும் மலையகமாக இருக்கட்டும்,

அயல் தேசத்து பறவைகளின் புகலிடமாக இருக்கட்டும்

இப்படி அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற
ஒரே மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமே.

வாருங்களேன். நீங்களும் வந்து கீழ்கண்ட அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்து ரசித்து அனுபவித்து மற்றவர்களுக்கும் சொல்லுங்களேன்...

முக்கியமாக இந்த சுற்றுலா தலங்களுக்கு
அரசின் எந்தவித நுழைவு வரியும் இல்லை
வாகன நிறுத்துமிட கட்டணமும் இல்லை.

தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒருநாள் இன்ப சுற்றுலாவாக திட்டமிட்டு வந்தால் அனைத்து இடத்தினையும் பார்த்து ரசிக்கலாம். குறைந்த செலவில் நிறைந்த சந்தோஷத்துடன் சுற்றுலாவை கண்டு களிக்கலாம்.

பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாதலங்களை பற்றி ஒரு சில வரிகளில் சுருக்கமாக கொடுத்திருக்கிறேன். படித்து முடித்து ஆர்வம் உள்ளவர்கள் நேரில் வந்து விரிவான விளக்கங்களை அறிந்து ஆச்சரியப்படுங்கள்.

சுற்றுலா ஏற்பாடு செய்யும் முனைவோர்களே.. டிராவல்ஸ் அதிபர்களே...
இதுமாதிரி ஒரு கலவையான சுற்றுலாவை நீங்கள் எங்கும் எப்பொழுதும் அமைத்திருக்க மாட்டீர்கள்., உங்கள் பகுதியில் உள்ளவர்களை பெரம்பலூருக்கு சுற்றுலா அழைத்துவந்து இன்புருங்கள். காத்திருக்கிறோம்.

ஜோதிடர்களே, நாடி பார்ப்பவர்களே, கைரேகை பார்ப்பவர்களே தோஷம் உள்ளவர்களையும், பரிகாரம் செய்யவேண்டியவர்களையும் எங்கள் பகுதியில் உள்ள அருள்மிகு ஏகாபரேஸ்வரர் - குருபகவான் கோயில், கண்ணகிக்கே மனதை ஆற்றுப்படுத்திய அருள்மிகு தண்டபாணி திருக்கோயில், சுவேதகேது முனிவருக்கே தோஷம் அகற்றி முக்தி கொடுத்த அருள்மிகு அபராதரட்சகர் திருக்கோயில் மற்றும் மதுர காளியம்மன் கோயில்களுக்குவரச்சொல்லுங்கள்.

மனநிறைவோடு கடவுள் அருளும் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும் அதுக்கு நான் உத்திரவாதம்.

உங்களுக்கு பொருளாதாரம் - எங்களுக்கு வாழ்வாதாரம்

வேறு தொழில்கள் வாய்ப்புகள் இல்லாத எங்கள்
வானம் பார்த்த வறண்ட பூமியான பெரம்பலூர்
உங்கள் சுற்றுலாவால் வளம் பெறட்டுமே....
------------------------------------------------------------
1. அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்-வாலிகண்டாபுரம்:
கி.பி. 10ம் நூற்றாண்டில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பராந்தக சோழனால் தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் கலைநயமிக்க சிற்பிகளால் பார்த்துப்பார்த்து அழகுற கட்டப்பட்ட சிறப்பு பெருமை பெற்றது இத்திருக்கோயில். திரேதா யுகத்தில் கிஷ்கிந்தை நாட்டின் அரசன் வாலியே வந்து இங்குள்ள சுயம்பு ஈஸ்வரரை வணங்கித்தான் எதிரியின் பலத்தில் பாதி பெற்றதும் / வாலியை இராமன் மறைந்து இருந்து அம்பெய்து கொன்ற இடம் இது என்றும் ஆதலால் இங்குள்ள ஈஸ்வரர் வாலீஸ்வரர் என்றும் ஊருக்கு வாலிகண்டாபுரம் என்றும் அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள். இது பெரம்பலூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கியதுவமான திருக்கோயில் ஆகும்.

2. இரஞ்சன்குடி கோட்டை – இரஞ்சன்குடி
சுந்தர சோழனின் சிற்றரசன் வன்னாட்டு தூங்கானை மறவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டியதாக வாலிகண்டபுரம் கோயில் கல்வெட்டுகள் சிறு குறிப்பினை தருகிறது..நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான் சுல்பீர் கான், மராட்டியர்கள், முகலாய ஆர்காடு நவாப் கூட்டு படைகள் ,கோட்டையை ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி உள்ளனர் .. 1751-52 ராபர்ட் கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படை ஆர்டினல் தலைமையிலான பிரெஞ்சுப் படை ஆகியோருக்கு இடையேயான போரில் ஆங்கிலேயர் கோட்டை மீது பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர் ..அதன் பிறகு ஆங்கிலேய நவாப் கூட்டுப் படைகளுக்கும்- ஹைதர் அலி படைக்கும் நடந்த போரின் போதும் இந்த கோட்டை பயன்படுத்தப்பட்டது. இது பெரம்பலூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் சென்னை தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை அழியாமல் உள்ள ஒரு சில கோட்டைகளில் இதுவும் ஒன்று.

3. மருதையாறு-கொட்டரை நீர்தேக்கம் (கொட்டரை அணை)
பெரம்பலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் வட்டம் கல்பாடி பிரிவிலிருந்து ஆதனூர் கொட்டரை நீர்தேக்கத்தை 18 கி.மீ.ல்வந்தடையலாம் புதிய அணை நீர்தேக்கம். புதிய பூங்கா. பரபர[ப்பான நகர வாழ்க்கையில் இருந்து விலகி மருதை ஆற்றின் அழகையும் இயற்கை வளத்தையும் கண்டுகளிக்கவும் மனதுக்கு இனிமை சேர்க்கவும் சிறந்த சுற்றுலாத்தலம்.

4. அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில்-சிறுவாச்சூர்:
கி.பி.9ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதும் ஸ்ரீ ஆதிசங்கரர் வழிபட்டு பாடல் பெற்ற முக்கியத் திருத்தலம். சிலப்பதிகார காவிய நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மனம் அமைதியின்றி வாழ்ந்ததாகவும் இங்கு வந்து செட்டிகுளம் தண்டாயுதபாணியால் ஆற்றுப்படுத்தப்பட்டு சிறுவாச்சூரில் அம்மனாக மக்களுக்கு அருள் பாளிப்பதாகவும் பெரியோர்கள் சொல்கின்றனர். வாரத்தில் திங்கள், வெள்ளி மற்றும் அம்மாவாசை, பௌர்ணமி தினங்களில் மட்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. இத்திருக்கோயில் பெரம்பலூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

5. தேசிய கல்மரபூங்கா-சாத்தனூர்:
இந்தியாவில் வேறு எங்கும் காணக்கிடைக்காத டைனோசர் முட்டை மற்றும் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட மரம் கல்லாகி போன பாசில்கள் (புதை படிமங்கள்) உள்ள ஒரே முக்கியத்துவம் வாய்ந்த இடம் இது. பெரம்பலூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள ஆலத்தூர் வட்டத்தில் திருச்சி தேசியநெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் பிரிவிலிருந்து செல்லும் சாலையில் சாத்தனூர் கிராமத்தில் ஏரிக்கரை அருகில் உள்ள இந்த தேசிய கல்மர பூங்காவில் மட்டும்தான். வரலாற்று பெட்டகம். ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த இடம் ஒருசிறந்த பாடமாகும்.

6. அருள்மிகு அபராதரட்சகர் திருக்கோயில்-சு.ஆடுதுறை:
சுவேதகேது முனிவரால் வணங்கப்பட்டு முக்தி பெற்றதும் கி.பி.12ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தலம். இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 11,12,13 ஆகிய தேதிகளில் சூரியன் மூலவர் சிலை மீது விழும்படி அமைக்கப்பட்ட சிறப்பு பெற்ற திருத்தலம். திருக்கோயில் தொழுதூர் திட்டக்குடி சாலையில் ஆக்கனூருக்கு தெற்கே சு. ஆடுதுறையில் வடவெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.

7. மயிலூத்து அருவி – லாடபுரம் மற்றும் கோரையாறு அருவி
தமிழகத்தில் இருக்கும் ஒரு சில அருவிகளில் பெரம்பலூர் நகரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் லாடபுரம் பச்சை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மயிலூத்து அருவிக்கும் ஒரு சிறப்பு இடம் உண்டு. இங்கு வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் நவம்பர் மாதங்களில் அருவியில் தண்ணீர் ஆர்பரித்து வந்து சீசன் களைகட்டும். அருவியில் குளித்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க மிகசிறந்த இடம்.
இந்த லாடபுரம் மகாபாரத போரில் பஞ்சபாண்டவர்கள் மறைந்து இருந்த (அஞ்சாதவாசம்) இடம் என்ற செவி வழிச்செய்தியும் உண்டு. பச்சைமலையில் திரௌபதிக்கு கோயில் இருந்ததாகவும் காலவெள்ளத்தில் சிதிலமடைந்துவிட்ட அந்த கோயிலையும் காணலாம். வரலாற்று சுவடுகள்.
கோரையாறு அருவி இந்த பச்சைமலைக்கு வடக்கே(பின்புறம்) அதாவது பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை கிருஷ்ணாபுரம் தொண்டமாந்துறை விஜயபுரம் அய்யர்பாளையம் வழியாக பச்சைமலை அடிவாரம் வந்தால் கோரையாறு அருவியை அடையலாம். இயற்கை அன்னையின் மடியில் சுத்தமான காற்று சுத்தமான தண்ணீர் மாசற்ற சூழல் வேண்டுவோருக்கு அமைதியான சிறந்த இடம்.
8. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்-செட்டிகுளம்.
கி.பி.12ம் நூற்றாண்டில் அதாவது சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் குலசேகர பாண்டிய மன்னனால் இவ்வாலயம் கட்டப்பட்டது. சூரிய ஒளி பங்குனி மாதம் 19,20,21 ஆகிய தேதிகளில் சுவாமிமீது விழும் வகையிலும் சிறுது நேரத்தில் அதே சூரிய ஒளி நகர்ந்து அம்மன் மீதும் விழும்படி இத்திருக்கோயில் தமிழனின் கட்டடகலையின் சிறப்பம்சமாகும். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத இங்கு குபேரனுக்கு தனி சன்னிதியும் பிரசாதமாக பச்சை குங்குமமும் வழங்கப்படுவது தனிச்சிறப்பு. அதுமட்டுமல்லாது 12 ராசிகளுக்குமான குபேரன் ஓம் வடிவில் தனித்தனியாக ஆலய தூண்களில் அமைத்துள்ளது வேறு எங்கும் இல்லா சிறப்பு. இதன் மூலம் குபேர சம்பத்துக்கு வழிகாட்டும் தளமாக இது திகழ்கிறது. இவ்வாலயம் பெரம்பலூரில் இருந்து துறையூர் சாலை பிரிவிலிருந்து செட்டிகுளம் 25 கி.மீ. திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆலத்தூர் கேட் பிரிவிலிருந்து 10 கி.மீ. தூரத்திலும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

9. விசுவகுடி அணை - கல்லாறு நீர் தேக்கம்
தமிழகத்தில் இருக்கும் மிகசில அணைகளில் 2015ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த விசுவகுடி நீர்தேக்கத்துக்கும் ஒரு இடம் உண்டு. அழகிய பூங்காவுடன் அமைந்த இந்த நீர்தேக்கம் பெரியவர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் ரம்மியமாக அமைக்கப்பட்டுள்ளது. இது பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் சாலையில் அன்னமங்கலம் ஊராட்சியில் 33 அடிவர்ரை நீர் தேக்கும் அளவில் கல்லாற்றின் குறுக்கே பச்சை மலைக்கும் செம்மலைக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினருக்குமான சி’றந்த சுற்றுலா தளம்..

10. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்-செட்டிகுளம்
தமிழகத்திலேயே முருகன் 11 கணுக்களுடைய கரும்புடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பது இத்தலத்தில் மட்டுமே. இத்தலத்தில் உள்ள காமாட்சியம்மன் அரக்கணை அழிக்க தண்டாயுதபாணிக்கு கரும்பினை கொடுத்தமையால் அம்மன் இத்தலத்தில் கரும்பில்லாமல் காட்சி கொடுக்கிறார். கி.பி.12ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது. இதன் கட்டிடகலைக்கும் வான சாஸ்திரத்திற்கும் ஒரு சான்று எடுத்துக்காட்டு அதாவது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம்19,20,21ம் தேதிகளில் மாலை வேளையில் சூரியனின் ஒளிகதிர்கள் சுவாமியின் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இத்திருதலத்தை தவிர வேறேங்கும் இல்லை. இது பெரம்பலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் பிரிவில் இருந்து செட்டிகுளம் சென்றால் மலை குன்றின்மீது இருக்கும் சுவாமி தண்டாயுதபாணியை தரிசிக்கலாம்.

11. பறவைகள் சரணாலயம் – ஆதனூர்
விதவிதமான வெளிநாட்டு பறவைகளையும் உள்நாட்டு பறவைகள் நாரை கொக்கு போன்ற பறவைகளை பார்க்கனுமா? அப்ப உங்க சாய்ஸ் பெரம்பலூர் அருகில் இருக்கும் ஆதனூர் பறவைகள் சரணாலயம்தான். வாருங்கள் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே ஏரியில் மரங்களில் பறவைகள் கிறீச்சிடும் ஓசையும் சிரகடிக்கும் அழகும் ரம்யமான சுற்றுச்சூழலும் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும். அனைவருக்குமான அருமையான ஒரு சுற்றுலாதலம் இது.

12. பிரம்மரிஷி சித்தர்கள் மலைக்கோயில் – எளம்பளூர்
மலைஏற்றம் விருப்பம் உள்ள ஆட்களுக்கு இது ஒரு சிறந்த சுற்றுலாவுக்கான இடம். சிறிய மலை 20-30 நிமிடங்களில் ஏறிவிடலாம். சித்தர்கள் சூட்சுமமாக உலவும் இடம் என்று சொல்லப்படுகிறது.. மலை அடிவாரத்தில் சித்தருக்கு கோயிலும். மலை மேல் விளக்கு தூணும் அமைக்கப்பட்டுள்ளது. மலை மேல் இருந்து கீழே பறவை பார்வையில் பெரம்பலூர் நகரத்தையும் தேசிய நெடுஞ்சாலையையும் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம். வாருங்களேன் ஒருமுறை பிரம்மரிஷி மலை ஏறித்தான் பாருங்களேன்... உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம். பெரம்பலூரில் இருந்து 3வது கி.மீ. எளம்பளலூரில் சென்னை தேசியநெடுஞ்சாலையில் இருந்து ஆத்தூர் செல்லும் சுற்றுவட்டச்சாலையில் அமைந்துள்ளது இந்த பிரம்ரிஷி மலை.
---------------------------------------------
அதிகம் பகிர்ந்து சேவை செய்யுங்கள் தோழமைகளே..!

ஒரு மாவட்டத்தின் வளர்ச்சியே உங்கள் கையில்...

தாமரை மக்கள் சேவை மையம்
9944433250












No comments:

Post a Comment